ஆப்நகரம்

இந்தியா - இலங்கை இடையே மெய்நிகர் உச்சி மாநாடு!

இலங்கை - இந்தியா இடையே செப்டம்பர் 26ஆம் தேதி காணொளிக் காட்சி வாயிலாக உச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 23 Sep 2020, 3:59 pm
இலங்கை - இந்தியா இடையே காணொளிக் காட்சி வாயிலாக செப்டம்பர் 26ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறும் என்றும், இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கட்டமைப்பது, இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கக் கூடும் என தெரிகிறது.

“இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் இருதரப்பு உறவின் பரந்த கட்டமைப்பை விரிவாக மறுஆய்வு செய்ய இரு தலைவர்களுக்கு இந்த உச்சிமாநாடு வாய்ப்பளிக்கும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் வெளிநாடுகளில் வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இந்தியா வந்தார். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, இரு தரப்புக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வ மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு முதல் முறையாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமான ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தங்களது வலுவான விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி