ஆப்நகரம்

உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதே; பொத்தாம் பொதுவாக ரஜினிகாந்த் பேசலாமா?

டெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வியால் நடந்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று தெரிவித்து இருந்தார்.

Samayam Tamil 27 Feb 2020, 11:45 am
டெல்லி கலவரத்துக்கு காரணம் உளவுத்துறையின் தோல்வி என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று கூறி இருந்தார்.
Samayam Tamil ரஜினிகாந்த்


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவில் இருந்தே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், அந்த சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.

இது திங்கள் கிழமை காலை பெரிய அளவில் டெல்லியின் வடகிழக்குப் பகுதி முழுவதும் பரவி பதட்டம் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு இருந்தபோது நடந்த இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

முஸ்லிம்களின் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதுவரை 32 பேர் கலவரத்திற்கு பலியாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பலி அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் போயஸ் கார்டனில் இருக்கும் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ''டெல்லியில் நடந்து வரும் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணம். உளவுத்துறையின் தோல்வி என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வி.

கலவரம் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த மசோதா தற்போது சட்டமான பின்னர் இனி திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

டெல்லி கலவரம்: அமித் ஷாவை 'டார்கெட்' செய்த ரஜினி!!

முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் முதல் ஆளாக நான் வந்து நிற்பேன் என்றுதான் கூறி இருந்தேன். மதத்தின் பெயரில் அரசியல் செய்வதை கண்டிக்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால், இன்று வெளியான பல்வேறு செய்திகளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை இரண்டும் தொடர்ந்து ஆறு முறை டெல்லி போலீசாருக்கு கலவரம் வெடிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்!!

ஞாயிற்றுக் கிழமை மதியம் 1.22மணிக்கு பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பதிவில், மஜ்பூரில் 3 மணிக்கு கூடுமாறு தெரிவித்து இருந்தார். இதுகுறித்து முதல் எச்சரிக்கையை உளவுத்துறை அனுப்பியுள்ளது.

இதையடுத்து பல இடங்களில் கும்பல், கும்பலாக ஆட்கள் கூடி இருப்பதையும், கற்கள் வீசி வருவது குறித்தும் எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையை போலீசார் மறுத்துள்ளனர்.

டெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் பெர்னி!!

ஆனால், போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''எச்சரிக்கையை அடுத்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து கபில் மிஸ்ராவை அகற்றினோம். அந்த நேரத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மிஸ்ரா ஆட்களின் மீது கற்களை வீசினர். இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் கலவரம் கட்டுக்கு அடங்காமல் நடந்துள்ளது. இப்படி இருக்கும்போது, கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணம் என்று எவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூற முடியும்.

முழுவதும் அறிந்து கொள்ளாமல், தான் கூறினால் அது பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்று யோசிக்காமல் ரஜினிகாந்த் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விஷயத்தில் உளவுத்துறை தனது வேலையை சரியாக செய்துள்ளது. செயல்படாத அரசுகள்தான் குற்றவாளிகளே தவிர, உளவுத்துறை அதிகாரிகள் அல்ல. கடமையுணர்வுடன் செயல்படும் அதிகாரிகளை தவறான தகவல்கள் ஊக்குவிக்காது.

முன்பும் தூத்துக்குடி சம்பவத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். யார் அந்த சமூக விரோதிகள் என்பதை தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறார். விசாரணை கமிஷனில் ஆஜர் ஆகாமல், தனது வழக்கறிஞர்கள் மூலம் எழுத்துபூர்வமாக இதற்கு ரஜினிகாந்த் விளக்கமும் அளித்துள்ளார். ஆனால், அந்த விளக்கம் இன்று வரை வெளியாகவில்லை.

அடுத்த செய்தி