ஆப்நகரம்

சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை; இந்தியர்களுக்கு ஷாக் நியூஸ்!

வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2020, 6:58 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இது ஒவ்வொரு கட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகளின் போதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஐந்தாம் கட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள் உள்ளிட்டவை 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம். பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 15ஆம் தேதிக்கு பிறகு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆலோசித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Flights Ban


இந்த தளர்வுகள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்திய விமான ஆணையத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

UNLOCK 5.0: மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

இந்த அறிவிப்பு சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு பொருந்தாது. சிறப்பு கோரிக்கையின் பேரில் குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படலாம்.

அதேசமயம் மத்திய அரசின் ஐந்தாம் கட்ட தளர்வுகளுக்கான வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழு அளவிலான சர்வதேச விமானப் போக்குவரத்து உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பின் நிலவரத்தைப் பொறுத்தே அமையும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத்துறை தலைவர் அருண் குமார் ஏற்கனவே தெரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி