ஆப்நகரம்

பிரதமருடன் சேர்ந்து சந்திரயான் 2 பார்க்கலாம்!

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை, இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பிரதமருடன் சேர்ந்து பார்ப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 14 Aug 2019, 12:28 pm
அண்மையில் இஸ்ரோ செலுத்திய சந்திரயான் 2 விண்கலம், வரும் செப்டம்பர் மாதம் நிலவில் தரையிறங்குகிறது. இந்த நிலையில், சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்ப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil space quiz


ஆகஸ்ட் 6ம் தேதி நிலவரப்படி, புவியின் ஐந்தாம் சுற்றுப்பாதையில், சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையில், புவிக்கும் சந்திரயானுக்கும் இடையே குறைந்தபட்ச தொலைவு 276 கி.மீ, அதிகபட்ச தொலைவு 1 லட்சத்து 42 ஆயிரத்து 975 கி.மீ ஆகும். இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 14) சந்திரயான் 2 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த நிலையில், தற்போது சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை, பிரதமர் மோடியுடன் சேர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பை இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வினாடி-வினா நிகழ்ச்சிக்கு இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றிபெறும் மாணவர்கள் பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திரயான் 2, நிலவில் தரையிறங்குதலை பார்க்கலாம்.

இதையும் படியுங்க:

8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் இஸ்ரோ நடத்தும் போட்டியில் பங்கு பெறலாம். இதற்கு mygov.in https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதே போல், பேஸ்புக், கூகுள், டுவிட்டர், லிங்க்ட்இன் (Linkedin) உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாகவும் க்யூ.ஆர் கோட் பயன்படுத்தி பதிவு செய்யலாம். இதற்கு ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாளாகும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது பெயர், முகவரி, படிக்கும் பள்ளி, மின்னஞ்சல் முகவரி என சுயவிபரங்களை பதிவு செய்ய வேண்டும். போட்டியில் ஒரு மாணவர், ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.

ஆன்லைன் வழி போட்டி தான் நடைபெறும். மொத்தம் 10 நிமிடங்களில் 20 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். மாணவர்கள் கேள்விகளை புரிந்து கொள்ளுவதற்கு வசதியாக பெற்றோர்கள், நண்பர்களை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் விடையைக் கூறக்கூடாது. கேள்வியை மட்டும் போட்டியாளர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும்.

போட்டியின் போது ஏதேனும் முறைகேட்டில் ஈடுபடுவது தெரிந்தால், அந்த மாணவர் உடனே போட்டியில் இருந்து விலக்கப்படுவர். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி