ஆப்நகரம்

சூரியனுக்கும் விண்கலம் அனுப்பப்படும்: இஸ்ரோவின் அடுத்த திட்டம்

சந்திரயானைப் போன்று சூரியனை ஆய்வு செய்வதற்கும் அடுத்த ஆண்டில் விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Jul 2019, 12:48 pm
Samayam Tamil isro aditya
சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில், சூரியனுக்கும் விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த சந்திரயான் 2 விண்கலம், நேற்று மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 15 நிமிடங்களில் புவி வட்ட பாதையை கடந்து சந்திரயான் 2 விண்கலம் நிலை கொண்டது.

இந்நிலையில், தற்போது சந்திரயானைப் போல், சூரியனை ஆய்வு செய்வதற்காக சூரியனுக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதே போன்று அடுத்த ஆண்டு முதல் பாதியில் சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்1’ என்ற விண்கலம் அனுப்பப்படும். ஆதித்யா விண்கலம் சூரியனில் இருக்கும் வெப்பம், ஒளி வட்டபாதை, கதிர்வீச்சு உள்ளிட்டவைகளை குறித்து ஆய்வு செய்யும்’. இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சூரியனை ஆய்வு செய்வதற்கான 'ஆதித்யா எல்1' திட்டப்பணிகள் தொடர்பாக இஸ்ரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை இங்கு க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்தியா சார்பில் சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது இதுவே முதன்முறையாகும்.

அடுத்த செய்தி