ஆப்நகரம்

ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் நீதி விசாரணை: கபில் சிபல் சரமாரி

ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அது தொடர்பாக நீதி விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

PTI 7 Jan 2017, 10:16 pm
மும்பை: ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அது தொடர்பாக நீதி விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil kapil sibal demands judicial probe into demonetisation scam
ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் நீதி விசாரணை: கபில் சிபல் சரமாரி


கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப் பிரச்னையை கையில் எடுத்த காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கியது.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அது தொடர்பாக நீதி விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், செல்லாது என அறிவிக்கப்பட்ட, புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.15.15 லட்சம் கோடிகளில் ரூ.14.97 லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன. அப்படியென்றால் கருப்புப்பணங்கள் முறையாக கணக்குகளுக்குள் வந்து விட்டது என அர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளும் பாஜக அரசு மற்றும் வங்கிகளின் சதிச் செயல்கள் இல்லாமல் இவைஅரங்கேற வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் கருப்புப்பணம் இல்லையென்றால், கருப்புப்பணம் மீதான நடவடிக்கை எங்கே? எனவும், பண மதிப்பிழக்க நடவடிக்கையை பிரதமர் மோடி எந்த வகையில் நியாயப்படுத்தி பேசி வருகிறார்? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பிய கபில் சிபல், இது தொடர்பாக நீதி விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினார்.

கஷ்டத்தை 50 நாட்கள் தாங்கிக் கொள்ளுங்கள், அதன்பின்னர் நிலைமை சீராகவில்லை என்றால் எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என பிரதமர் கூறியதை குறிப்பிட்டுக் காட்டிய கபில் சிபல், தற்போதும் நிலைமை சீராகவில்லை. எனவே, எங்கு வைத்து, எந்த மாதிரியான தண்டனையை பிரதமர் ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவர் அறிவிக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.

மேலும், மேற்குவங்கம் மற்றும் தமிழக அதிகாரிகளிடம் இருந்து கட்டுகட்டாக புதிய ரூ.2,000 நோட்டுகள் கையும், களவுமாக பறிமுதல் செய்யப்பட்டதில், பாஜக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கபில் சிபல் எழுப்பியுள்ளார்.

கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை. எனவே, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் பதில் அளிக்க வேண்டும். எங்களுக்கு நாடாளுமன்றத்தில் தான் அவர் பதிலளிக்க வேண்டுமே தவிர வெளியில் அல்ல என்று கபில் சிபல் கூறியது குறிப்பிடத்தக்கது.
Kapil Sibal Demands Judicial Probe into 'Demonetisation Scam'

அடுத்த செய்தி