ஆப்நகரம்

பெங்களூருவில் ஊரடங்கு நீட்டிப்பு!

பெங்களூருவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jul 2020, 9:47 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூருவில் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஊரடங்கு குறித்த விரிவான வழிமுறைகள் திங்களன்று (ஜூலை13) அறிவிக்கப்படும்.
Samayam Tamil பெங்களூரு


ஊரடங்கின்போது மக்களுக்கு தேவையான பால், காய்கறிகள், பழங்கள், மருந்துகள், மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைத்த கருத்துகளின் அடிப்படையில், பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் திங்களன்று வெளியிடப்படும். பால், காய்கறிகள், பழங்கள், மருந்துகள், மளிகை ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, வழிமுறைகளை பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஏற்கெனவே ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 12) முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என கர்நாடக அமைச்சர்களே தெரிவித்து வந்தனர். ஆனால் அதையும் தாண்டி தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் இன்று மாலை வரை ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,216ஆக உயர்ந்துள்ளது. இதில் 613 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 14,716 பேர் குணமடைந்துள்ளனர். பெங்களூருவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,533 உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை பெங்களூருவில் 16,862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி