ஆப்நகரம்

சுதந்திர போராட்டத்தின் போது பிரிந்து, 72 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த கேரள தம்பதி!

கண்ணூர்: பிரிந்து சென்ற தம்பதி, 72 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Dec 2018, 5:39 pm
கடந்த 1946ல் கேரள மாநிலம் கவும்பயி கிராமத்தில் விவசாயிகள் நடத்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற ஈகே நாராயணன் நம்பியார்(93) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தனது முதல் மனைவியை 72 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துள்ளார். அவர் பெயர் சாரதா(89). இருவரும் அருகருகே அமர்ந்தனர்.
Samayam Tamil Nambiar


“எனக்கு யார் மீதும் கோபம் இல்லை” என்று சாரதா கூறுகிறார். அதற்கு, “ஏன் மௌனமாக இருக்கிறாய்? ஏன் எதுவும் பேசாமல் உள்ளாய்?” என்று நாராயணன் கேட்கிறார். அதற்கு தலைகுனிந்தவாறே சாரதா அமர்ந்திருக்கிறார். சாரதாவிற்கு 13, நாராயணனுக்கு 17 வயதான போது திருமணம் நடந்துள்ளது. 10 மாதங்கள் கடந்த பிறகு, நாராயணன் மற்றும் அவரது தந்தை தலியான் ராமன் நம்பியார் ஆகியோர் கவும்பயில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பின்னர் இருவரும் தலைமறைவாகினர். அப்போது இளம் மனைவியாக இருந்த சாரதா, தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்ற மலபார் சிறப்பு போலீசார் ராமன், நாராயணனை தேடியுள்ளனர். அவர்களது வீட்டை சூறையாடி, தீவைத்து சென்றுள்ளனர். இதையடுத்து இரு மாதங்களில் இருவரும் கைது செய்யப்பட்டனர். நாராயணனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கண்ணூர், வைய்யூர், சேலம் ஆகிய சிறைகளில் தண்டனையை கழித்துள்ளார். இவருடைய தந்தை பிப்ரவரி 11, 1950ல் சேலம் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு சாரதாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைத்தனர். 1957ல் சிறையில் இருந்து வெளியான நாராயணனும் வேறொரு திருமணம் செய்து கொண்டார். காலம் உருண்டோடியது.

சாரதாவின் மகன் பார்கவன், ஒரு இயற்கை விவசாயி. இவர் நாராயணனின் உறவினர்களுடன் பழகும் சூழல் ஏற்பட்டது. இதன்மூலம் தனது குடும்ப வரலாற்றை அறிந்து கொண்டார். இதையடுத்து இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பரசினிகடவில் உள்ள பார்கவன் இல்லத்திற்கு சாரதாவை சந்திக்க நாராயணன் வந்துள்ளார். முதலில் சாரதா வெளியே வந்து நாராயணன் உடன் பேச மறுத்துள்ளார்.

ஆனால் நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு, நேரில் சந்தித்துள்ளார். இருவரும் அமைதியாக கண்ணீரை மட்டும் வெளிப்படுத்தியுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் விதவையான சாரதாவிற்கு 6 பிள்ளைகள். அவர்களில் 4 பேர் மட்டும் உயிருடன் இருக்கின்றனர். நாராயணனின் பேத்தி சாந்தா கவும்பயி, ”டிசம்பர் 30” என்ற பெயரில் கவும்பயில் நடந்த போராட்டத்தை நாவலாக எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி