ஆப்நகரம்

Sabarimala Row: சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன்!

சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 2:10 pm
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உரிய பாதுகாப்புகளோடு நிறைவேற்றப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pinarayivijayan2-k5gB--621x414@LiveMint
சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன்!


சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘சபரிமலை விவகாரத்தில் ஏற்கெனவே எங்கள் நிலைபாட்டை தெளிவாக தெரிவித்து விட்டோம். அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு செயல்படுத்தப்படும். மேலும் கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது.

சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது. அப்படி யாராவது செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, சபரிமலை பிரச்சினைக்கு சமரச தீர்வு காணும் வகையில், பந்தளம் மன்னர் குடும்பத்தினருடன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று பேச்சு வார்த்தை நடத்தியது.

அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு எட்டாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இதனிடையே, ஐப்பசி மாத மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. இந்நிலையில் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையான பெண்களை அனுமதித்தால் வன்முறை வெடிக்கும் என்று கோயிலின் தலைமை தந்திரி மகேஷ்வரரு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி