ஆப்நகரம்

அரசியல் கட்சி அலுவகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- பரபரப்பு புகார்

கேரள மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Mar 2019, 8:51 am
கேரள மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கட்சி அலுவலகத்தில் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் புகார்


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செர்புளசேரி பகுதியில் இருக்கும் பிரதான சாலையோரம் கடந்த 16-ம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குபப்திவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிளை கொண்டு ஆய்வு செய்ததில் இளம் பெண் ஒருவர் குழந்தையை வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கல்லூரி விழா மலர் தயாரிப்பதற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்றபோது கட்சியின் மாணவர் பிரிவில் இருக்கும் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் மூலம் உருவான குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தூக்கி எறிந்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனால், சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே குற்றம் சாட்டப்பட்ட கட்சி தொண்டரிடம் பாதிக்கப்பட்ட பெண் நட்பாக பழகியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காவல்துறையினர், தங்களது விசாரணையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கட்சி தொண்டரிடம், பாதிக்கப்பட்ட பெண் இன்டர்நெட் மூலம் நட்பாக பழகியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருக்கும் வாடகை குடியிருப்பு ஒன்றில் வைத்து அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தங்களது விசாரணையின் அடிப்படையில், இதற்கும் கட்சி அலுவலகத்துக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ள போலீசார், கட்சி அலுவலகத்தின் அருகில் குற்றம் சாட்டப்படும் நபர் கேரேஜ் ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்பெண்ணின் குடும்பத்துக்கு தான் கட்சியுடன் தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கோ கட்சியுடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சி மீது அவதூறு பரப்பப்டுகிறது என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை கேரள மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இதனை கண்டித்து செர்புளசேரி கட்சி அலுவலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன பேரணி ஒன்றையும் நடத்தினர்.

இதனிடையே, பிரசவத்துக்கு முன்பு வரை கர்ப்பம் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என அப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி