ஆப்நகரம்

ஒரு வேலையும் நடக்கல; கூச்சல், குழப்பம், அமளி - சபாநாயகர் இதைவிட வேறென்ன செய்ய முடியும்!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் 2வது நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 3 Mar 2020, 1:41 pm
கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது அமர்வு தொடங்கியது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil LOk Sabha Session


இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதே விஷயத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு அவைகளிலும் பதாகைகள் உடன் சென்று எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பினர். நேற்றைய தினம் நடந்த அமளியால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் எம்.பிக்கள் சிலர் தாக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரும் அவை உறுப்பினர்களை எச்சரித்தார். இதையொட்டி இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டியிருந்தார்.

டெல்லி கலவரம்: மக்களை ரோட்டில் நடமாட விடாமல் செய்த 25பேர் கைது!

அதில் அவையை சுமூகமாக நடத்துவது பற்றி அறிவுறுத்தினார். பதாகைகளை அவைக்கு கொண்டு வரலாமா? வேண்டாமா? என்பது பற்றி எதிர்க்கட்சிகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தவறு செய்தால் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று எச்சரித்தார். இரண்டாவது நாளான இன்று அவை கூடியதும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

”வந்தே மாதரம்” என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து எம்.பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு அவைகளும் முதலில் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டன.

அடுத்த செய்தி