ஆப்நகரம்

அநீதியில் ஒருபோதும் ராமர் தோன்ற முடியாது... இது ராகுல் பஞ்ச்!!

நீதியின் உருவமான ராமர், அநீதியில் ஒருபோதும் தோன்ற முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 5 Aug 2020, 5:30 pm
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்று, கோயில் கட்டுமான பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
Samayam Tamil rahul gandhi


அதன்பின் விழாவில் அவர் பேசும்போது, " ராமர் பிறந்த இடத்தை விட்டு அவரை வெளியேற்ற நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கடவுளையும் மனிதனை இணைக்கும் பாலமாக ராமர் கோயில் அமையும். அயோத்தியில் ராமர் கோயில் என்ற பலரது பல ஆண்டு கனவு தற்போது நனவாகியுள்ளது" என்று பெருமைப் பொங்க பேசினார்.

இந்த நிலையில், அயோத்தி விழாவை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அயோத்தியில் கம்பராமாயண வரிகளை உச்சரித்த பிரதமர் மோடி!!

ஹிந்தியில் உள்ள அந்த பதிவில், " இறைவன் ராமர் மிக உயர்ந்த மனித விழுமியங்களின் மொத்த உருவகம். நம் இதயத்தில் ஆழமாய் பதிக்கப்பட்டுள்ள மனிதநேயத்தின் அடையாளம். எனவே அநீதி, கொடுமை, வெறுப்பு போன்ற விரும்பதகாத அம்சங்களில் அவர் ஒருபோதும் தோன்ற முடியாது" என்று தமது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி கூறும்போது, "அனைத்து தரப்பினருக்கும் வாழ்விடம் அளித்தவர் ராமர் பிரான். எல்லா மக்களின் நலனை விரும்பியவர். ஸ்ரீராமரின் அருளால் அயோத்தியில் நடைபெறும் விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வாக அமையட்டும்" என்று வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி