ஆப்நகரம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு - முழு விவரம்!

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Sep 2020, 12:41 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் சதித்திட்டம் தீட்டியது, மசூதி இடிப்பிற்கு தூண்டுதலாக இருந்தது என பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 17 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் எஞ்சிய 32 பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
Samayam Tamil CBI Court


முதலில் ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், பின்னர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாறியது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி இறுதி வாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து வரும் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று செப்டம்பர் 16ஆம் தேதி நீதிபதி எஸ்.கே.யாதவ் அறிவித்தார்.

அதன்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி லக்னோ நீதிமன்ற வளாகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போ பாபர் மசூதி, இப்போ ஈத்கா மசூதி; வெடிக்கும் கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை!

இன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, சதிஷ் பிரதான், மகந்த் நிரிட்யா கோபால் தாஸ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர். மற்ற அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.

தீர்ப்பின் விவரம்:

* பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு 2,000 பக்கங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது.

* நீதிமன்ற அறை எண் 18-ல் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஐந்து ஐந்து பேராக அழைக்கப்பட்டு தீர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

* வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை.

* இந்த வழக்கில் சிபிஐ சமர்பித்த புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஏற்புடையது அல்ல.

* பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை.

* பாபர் மசூதியை இடிக்க முயன்ற கரசேகவர்களை குற்றம்சாட்டப்பட்டோர் தடுத்தனர்.

அடுத்த செய்தி