ஆப்நகரம்

மேற்கு வங்கத்துக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் பாஜக; மம்தா கடும் கண்டனம்

மேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2019, 3:16 pm
மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைக்கப்படுவது உண்டு.
Samayam Tamil Mamata-Banerjee


கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை கொண்டாட மாநில முழுவதும் 28 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுக்கள் தங்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதை ஏற்று துர்கா பூஜை குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

துர்கா பூஜை குழுக்களுக்கு உதவுவதால் மேற்கு வங்க அரசுக்கு ரூ.28 கோடி செலவிடப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து துர்கா பூஜை குழுக்கள் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

துர்கா பூஜைக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படுவதற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் சவுரப் தத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் துர்கா பூஜை சிறிது காலம் நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனை மேற்கு வங்க பாஜக வரவேற்று இருந்தது.

இந்நிலையில் தற்போது, துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில், ஆண்டுதோறும் துர்க்கா பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கென தனியே துர்க்கா பூஜை கமிட்டிகளும் இயங்கி வருகிறது. திருவிழா போல் நடைபெறும் இந்த பண்டிகைக்காக மேற்கு வங்கத்தில், அம்மாநில அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், துர்க்கா பூஜை பண்டிகையின் போது செலவாகும் பணம் மற்றும் அதன் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கடந்த வாரம் துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, பாஜக தலைமையிலான மத்திய அரசு, துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அளிக்கும் நிதியில் இந்த விழா நடத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், அதற்கு வருமானவரி வசூலிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி