ஆப்நகரம்

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி ரமலான் ட்வீட்!

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம் என ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Samayam Tamil 24 Apr 2020, 9:09 pm
டெல்லி: ரமலான் பண்டிகையையொட்டி கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தின் ஒருமாத காலம் நோன்பு, பிறை தெரிந்ததால் நாளை முதல் இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மசூதிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படுவதாகவும், இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்தே தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோன்பு முடிக்க மாலையில் ஒன்று கூடுவதையும், இப்தார் நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ரம்ஜான் வாழ்த்துகள்! ஒவ்வொருவரும் பாதுகாப்புடனும், வளமுடனும் இருப்பதற்காக நான் பிராத்திக்கிறேன். இந்த புனிதமான மாதம் நமக்கு கருணை, இரக்கம் மனிதநேயத்தை தரட்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி