ஆப்நகரம்

ஜெயபால் ரெட்டி தலைசிறந்த பாராளுமன்ற மேதை - வைகோ இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெயபால் ரெட்டி ஒரு தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 28 Jul 2019, 4:38 pm
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி ஒரு தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று புகழாரம் சூட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மறைக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Jairam Reddy


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதைகளில் ஒருவரான ஆந்திரத்தைச் சேர்ந்த என் உயிரான நண்பர் ஜெயபால் ரெட்டி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

மாற்றுத் திறனாளியான ஜெயபால் ரெட்டி அவர்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எண்ணற்ற விவாதங்களில் எடுத்து வைத்த கருத்துகள் ஈடு இணையற்றவை. ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும் வல்லமை உள்ளவர்.

திருவாசகம் இசை ஒலி நாடா வெளியீட்டு விழாவுக்கு என் அழைப்பின் பேரில் சென்னையில் வந்து பங்கேற்றுச் சிறப்பித்தார்.

ஹைதராபாத்துக்குச் சென்று அவரது இல்லத்தில் உள்ளவர்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறேன். அவர் மறைந்த செய்தி கேட்டவுடன், அவரது மூத்த மகன் அரவிந்த் ரெட்டி அவர்களோடு அலைபேசியில் பேசினேன். சாதாரண காய்ச்சல் என்றுதான் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரே நாளில் அவர் உயிர் நீத்தது பேரிடியாய் எங்கள் குடும்பத்தில் விழுந்துவிட்டது என்றார்.

77 வயதான ஜெயபால் ரெட்டி அவர்கள் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கலிங்கப்பட்டி கிராமத்தில் தேசிய கைப்பந்தாட்டப் போட்டியை நான் நடத்தினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு தொலைக்காட்சிகளில் அந்தப் பந்தயத்தை ஒளிபரப்பச் செய்தார்.

அவருடன் பழகிய நாட்கள் மனதுக்கு மிகவும் ரம்மியமானவை; பசுமையானவை. அவரது மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிழப்பாகும். அவரது துணைவியாருக்கும், அவரது இரண்டு புதல்வர்கள், புதல்விக்கும், குடும்பத்தினருக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி