ஆப்நகரம்

மே 4 முதல்... ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - உள்துறை அமைச்சகம் தகவல்!

இரண்டாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற பின்னர் என்னென்ன நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Apr 2020, 11:21 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே 3ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நாட்டில் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு மூலம் கொரோனா வைரஸ் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும்.
Samayam Tamil ஊரடங்கு தளர்வு


இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். வரும் மே 4ஆம் தேதியில் இருந்து புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். அதில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்படும். இதுபற்றி வரும் நாட்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் உரிய கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

’ஆரோக்கிய சேது’ ஆப்; நீங்களே விட்டாலும், இது உங்களை விடாது - எப்படி தெரியுமா?

மேலும் அத்தியாவசியமில்லாத பொருட்கள் விற்கும் தனித்திருக்கும் கடைகள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியம் அல்லாத பொருட்களை ட்ரக்குகள், ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. இந்த சூழலில் மாநிலங்களுக்கு உள்ளே மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் பயணிக்கலாம் என்று நேற்று உத்தரவிடப்பட்டது.

முன்னதாக தெலங்கானா மாநிலம் வரும் மே 7ஆம் தேதி வரையும், பஞ்சாப் மாநிலம் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டன. இதற்கிடையில் பிரதமர் மோடியுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களும் ஊரடங்கை நீட்டித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு 129ஆக குறைந்துள்ளது. இது முந்தைய நாளில் 170ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் வைரஸ் தொற்று இல்லாத மற்றும் பச்சை மண்டலங்களில் 325ல் இருந்து 307ஆக குறைந்திருக்கிறது. ஆனால் ஆரஞ்ச் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 207ல் இருந்து 297ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

கடந்த 15ஆம் தேதி நாட்டின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 170 மாவட்டங்களை கொரோனா ஹாட்ஸ்பாட்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் 123 மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 325 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்றைய தினம் மொத்த பாதிப்பு 31,787ஆகவும், பலி எண்ணிக்கை 1,008ஆகவும் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி