ஆப்நகரம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு மாற்றம்!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு நீக்கிக் கொண்டுள்ளது. இனி அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2019, 12:26 pm
இந்தியாவின் பிரதமராக 2004 முதல் 2014 வரை இருந்தவர் மன்மோகன் சிங். இவர் சமீபத்தில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். தற்போது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கிக் கொண்டு இசட் ப்ளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
Samayam Tamil MMS


இனி இவரது பாதுகாப்பு சிஆர்பிஎப் பாதுகாப்பின் கீழ் வருகிறது. மத்திய அரசின் கீழ் வரும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மன்மோகன் சிங் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னரே இந்த முடிவை எடுத்து இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், ''தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தல் எழும்போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு உள்ளாக்கப்படும். தொடர்ந்து இசட் ப்ளஸ் பாதுகாப்பு மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே உயர்தர பாதுகாப்பு எஸ்பிஜி பாதுகாப்புதான். கடந்த மூன்று மாதங்களாக கேபினட் அமைச்சரவை, உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகம் இரண்டும் கலந்து கொண்டு விவாதித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பின்னர், இனி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, பிரியங்கா வத்ரா காந்தி, ராகுல் காந்திக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு சிஆர்பிஎப்புக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்று அந்த துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் 1985ல் உருவாக்கப்பட்டது எஸ்பிஜி. இதற்கான சிறப்பு சட்டம் 1988ல் நிறைவேறியது. பிரதமருக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 1989ல் விபி சிங் பிரதமர் ஆனார். அப்போது ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

பின்னர் ராஜீவ் காந்தி 1991ல் கொல்லப்பட்ட பின்னர் இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, முன்னாள் பிரதமர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்த செய்தி