ஆப்நகரம்

விவசாய நிலத்தில் அதிசயம்; தோண்டும் போது சிக்கிய 60 லட்ச ரூபாய் வைரம்!

குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் சிறு விவசாயிக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 7 Dec 2020, 3:34 pm
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவைச் சேர்ந்தவர் லகான் யாதவ்(45). பன்னா தேசிய பூங்காவிற்காக வெளியேற்றப்பட்ட கிராம மக்களில் இவரும் ஒருவர். இதற்காக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு 2 ஹெக்டேர் நிலம் மற்றும் இரண்டு எருமை மாடுகளை வாங்கியுள்ளார். இந்த சூழலில் கடந்த மாதம் 200 ரூபாய்க்கு நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில், நிலத்தை தோண்டும் போது வைரக் கற்கள் கிடைத்துள்ளன. அதனை ஆய்வு செய்ததில் 14.98 கேரட் வைரம் என்பது தெரியவந்தது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கூறியுள்ளார்.
Samayam Tamil MP Farm Land Diamond


அவர்களின் உதவியுடன் வைரம் ஏலத்திற்கு விடப்பட்டதில் 60.6 லட்ச ரூபாய் பணம் கிடைத்துள்ளது. இதனால் சிறு விவசாயியாக இருந்த லகான் யாதவ், தற்போது லட்சாதிபதியாக மாறியுள்ளார். இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேட்டியளித்த லகான், வழக்கமாக பூமியைத் தோண்டும் போது கற்கள் தான் கிடைக்கும். ஆனால் கடந்த முறை புதுமையான ஒரு கல் கிடைத்தது.

அது என் வாழ்வையே மாற்றி விட்டது. இதன்மூலம் எனக்கு கிடைத்த பணத்தை நிரந்தர வைப்புத்தொகையாக வங்கியில் போட்டு வைத்துள்ளேன். நான் படிப்பறிவு இல்லாதவன். எனக்கு பெரிதாக எந்த ஆசையும் இல்லை. என்னுடைய நான்கு பிள்ளையும் நன்றாக படிக்க வைப்பதற்கு அந்த தொகையை பயன்படுத்திக் கொள்வேன்.

வானில் நிகழப் போகும் அதிசயம்; அதுவும் 397 வருஷத்துக்கு அப்புறமாம்!

என்னிடம் சைக்கிள் மட்டுமே இருந்தது. இந்த சூழலில் உறவினர்கள் வற்புறுத்தியதால் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளேன். எனக்கு மேலும் ஒரு வைரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக சில மாதங்கள் கடுமையாக நிலத்தில் வேலை செய்யவுள்ளேன்.

மேலும் இந்த நிலத்திற்கான குத்தகையை நீட்டிக்க திட்டமிட்டிருக்கிறேன் என்றார். முன்னதாக பன்னாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 4 பேருக்கு நிலத்தை தோண்டும் போது வைரக் கற்கள் கிடைத்துள்ளன. இவை மொத்தம் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி