ஆப்நகரம்

நாட்டை உலுக்கிய நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை!

நிர்பயாவை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர், சிறையில் தூக்கிட்டு கொண்ட ஒருவர், விடுதலையான சிறுவன் தவிர எஞ்சிய 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்

Samayam Tamil 20 Mar 2020, 6:00 am
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். காம அரக்கர்களின் மூர்க்க பிடியில் சிக்கி சீரழிக்கப்பட்டு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 4 பேருக்கும் மார்ச் 20ஆம் தேதி (இன்று) காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அவர்கள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை

2012, டிசம்பர் 16ஆம் தேதி: தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

2012, டிசம்பர் 17ஆம் தேதி: நாடு முழுவதும் போராட்டங்களையும், கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக பேருந்து ஒட்டுநர் ராம் சிங், அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

2012, டிசம்பர் 29ஆம் தேதி: சம்பவம் நடைபெற்று 11 நாட்களுக்கு பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா உயிரிழந்தார்.

2013, மார்ச் 11ஆம் தேதி: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிர்பயா வழக்கு: காலை 5.30 மணிக்கு தூக்கு..! சிறைக்கு முன்பு கூடிய பொதுமக்கள்

2013, ஜூலை 8ஆம் தேதி: எஞ்சிய குற்றவாளிகள் மீதான விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு சாட்சியங்களை முன் வைத்து வாதத்தை முடித்தது.

2013, ஆகஸ்ட் 31ஆம் தேதி: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார்.

2013, செப்டம்பர் 10ஆம் தேதி: அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேரை குற்றவாளிகள் என அறிவித்த விரைவு நீதிமன்றம், அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

2014, மார்ச் 13ஆம் தேதி: விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

2014, மே - ஜூன் 2ஆம் தேதி வரை: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனையேற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை அவர்களின் தூக்குத் தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

2017, மே 5ஆம் தேதி: அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேரின் தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு நாடு முழுவதும் வரவேற்கப்பட்டது.

நிர்பயா பாலியல் வழக்கையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!

2018, ஜூலை 9ஆம் தேதி: குற்றவாளிகள் பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோர் 2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2019, டிசம்பர் 7ஆம் தேதி: குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா என்பவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பினார். அதனை நிராகரிக்க வேண்டும் என டெல்லி அரசு, துணை நிலை ஆளுநரின் பரிந்துரையையேற்று உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆனால், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் கருணை மனு அளிக்கப்பட்டதாக வினய் ஷர்மா தெரிவித்தார்.

2019, டிசம்பர் 18ஆம் தேதி: தூக்குத்தண்டனை உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யாத குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2020, ஜனவரி 7ஆம் தேதி: குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி நிர்பயாவின் பெற்றோர், தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்தது. அத்துடன், ஜனவரி 22ஆம் தேதி காலை 7மணிக்கு 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

2020 ஜனவரி - மார்ச் மாதம்: கருணை மனு, மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட சட்டப் போராட்டங்களை குற்றவாளிகள் கையில் எடுத்ததால் அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடித்தது. இதனிடையே, மார்ச் 20ஆம்தேதி புதிய தூக்கு தேதியை டெல்லி விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

2020, மார்ச் 19ஆம் தேதி: பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளதால் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தூக்குத்தண்டனை கைதிகள் மூன்று பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

2020, மார்ச் 20ஆம் தேதி அதிகாலை 2.30 மணி: குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த கருனை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

2020, மார்ச் 20ஆம் தேதி காலை 5.30 மணி: நிர்பயாவை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர், சிறையில் தூக்கிட்டு கொண்ட ஒருவர், விடுதலையான சிறுவன் தவிர எஞ்சிய 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

அடுத்த செய்தி