ஆப்நகரம்

ப.சிதம்பரத்தின் காவல் அக்.,17ஆம் தேதி வரை நீட்டிப்பு

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மறுபடியும் நீட்டிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 3 Oct 2019, 4:51 pm
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chidambaram


அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தன்னுடைய தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடைசியாக அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 3ஆம் தேதி (இன்று) வரை நீட்டித்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது காவலை வருகிற 17ஆம் தேதி வரை நீட்டித்து உத்தர்விட்டது.

முன்னதாக, சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு நீதிமன்ற வளாகத்தில் மர்ம பை ஒன்று கிடந்ததால் அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி