ஆப்நகரம்

இயல்புநிலைக்கு திரும்பிய ஜம்மு -காஷ்மீர்... புள்ளிவிவரத்தோட சொல்லி அடிக்கும் மத்திய அரசு!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்ட வருவதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டி வரும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் இன்று தெரிவித்துள்ளன.

Samayam Tamil 11 Sep 2019, 7:13 pm
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370 -ஆவது சட்டப்பிரிவை, கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இம்மாநிலம், ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
Samayam Tamil nljk


இதையடுத்து, அங்கு வன்முறை, கலவரங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல்ஃபோன் மற்றும் இணையதள சேவை தற்காலிகமாக தூண்டிக்கப்பட்டிருந்தன. ஜம்மு , ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃபதி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் காரணங்காட்டி, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருவதாக, பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தின் முன்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரத்தை முன்வைத்து, இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டின. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை முற்றிலும் திரும்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமும், அந்த மாநில அரசும் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளன.


இதன்படி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் லேண்ட்லைன் தொலைபேசி வசதி மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. மொபைல்ஃபோன் (போஸ்ட்பெய்டு) சேவையும் வழங்கப்பட்டுவிட்டது. பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் வருகை விகிதம் வியக்கத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

அரசு, தனியார் என அனைத்து மருத்துவமனைகளும் இயங்க தொடங்கிவிட்டன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை, மாநிலம் முழுவதும் மொத்தம் 5.1 லட்சம் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். பல்வேறு நோய்களுக்கென மொத்தம் 15,157 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. ஜம்மு -காஷ்மீர் வங்கியில் மட்டும் 108 கோடி ரூபாயை பொதுமக்கள் எடுத்துள்ளனர். பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. கடந்த மாதம் 6 -ஆம் தேதி முதல் 42, 600 முறை சரக்கு லாரிகள் மாநிலத்துக்கு வந்து செல்கின்றன.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் விமான டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவையான இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி