ஆப்நகரம்

ஊஞ்சலாடிய பிரதமர்கள்; ஊடுருவிய சீன ராணுவம் : ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்

இ்ந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவிய பிறகு, PM-CARES நிதியத்துக்கு சீன நிறுவனங்களிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடி கோடிக்கணக்கான ரூபாய் நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

Samayam Tamil 28 Jun 2020, 11:44 pm
லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கூறும்போது, " இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்கு தக்கபாடம் கற்பிக்கப்பட்டது" என தெரிவித்திருந்தார்.
Samayam Tamil pc


"யாரும் ஊடுருவவில்லை என்றால், 20 இந்திய வீரர்கள் எப்படி உயிரிழந்தனர்?" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தார், இந்தச் சம்பவத்தை வைத்து, "பிரதமர் நரேந்திர மோடி சரண்டர் மோடி ஆகிவிட்டார்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

அத்துடன் "சீன விவகாரத்தில் இனியேனும் பிரதமர் உண்மையை பேச வேண்டும்" என்றும் ராகுல் கூறியிருந்தார். இந்த நிலையில், , PM-CARES நிதியத்துக்கு சீன நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டது குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எல்லையில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறோம்: மோடி பெருமிதம்!

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?" எனக் கேட்டுள்ளார்.


அத்துடன், "சீனா எப்பொழுது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020 இல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களுடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


மேலும், "2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கின்றன. அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீயும், இந்தியப் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன! இது எப்படி இருக்கு?" எனவும் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

அடுத்த செய்தி