ஆப்நகரம்

உயர்கிறது பிஎப் வட்டி விகிதம்: அமைச்சர் அறிவிப்பு..

பிஎப் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் இபிஎப் ஓவில் உள்ள 6 கோடி பேர் பயனடைவார்கள்... மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்..

Samayam Tamil 18 Sep 2019, 7:56 am
அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என தமிழில் கூறப்படும் பிஎப் பிடித்தம் செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும். எனினும், இந்தியா போன்ற நாடுகளில் பல நிறுவனங்கள் முறையாக பிஎப் போன்ற சலுகைகளை வழங்குவது இல்லை.
Samayam Tamil 1461062715_iCgIQa_epfo-pti-870

இதுகுறித்து பல புகார்கள் எழுந்தபோதும், பலருக்கு நிர்வாகம் உறுதியளித்த சம்பளமே கிடைப்பதே கேள்விக்குறியாகத் தான் உள்ளது. வருங்கால வைப்பு நிதி போன்றவற்றை வழங்காமல் முறைகேடாகச் செயல்படும் நிறுவனங்கள் ஒருபக்கம் இருக்கும் நேரத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவார் வருங்கால வைப்பு நிதி கொண்டிருப்பவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றைத் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அமைச்சர் சந்தோஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
இபிஎப்ஓ உறுப்பினர்களின் மத்தியக் குழு, கடந்த நிதியாண்டான 2018-2019 காலத்தில் பெறப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்குவதுக்கு முன் வந்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வட்டி விகிதம் 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாக இருந்தது. முன்பை காட்டிலும் இப்போது வழங்கப்படும் வட்டி 0.10 சதவீதம் அதிகமாகும்.
இபிஎப்ஓ மத்தியக்குழு ஓப்புதலையடுத்து, மத்திய அமைச்சகத்தின் ஓப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஓப்புதல் ஓரிரு தினங்களில் கிடைத்துவிடும். ஓப்புதல் கிடைத்தவுடன் கடந்த நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நீதி 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டு, சம்பந்தப்பட்ட சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார். இப்போது இந்த வட்டி சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம், நாடு முழுவதும் சுமார் 6 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அவ்வப்போது தொழிலாளர்கள் நலன் சார்ந்து சட்டங்களையும், சில திட்டங்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வைப்பது ஒருபுறம் இருந்தாலும். பல இடங்களில் இது முறையாகச் சென்று சேருவதில்லை என்பதே உண்மை.

அனைத்து பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் பத்திரிக்கைத் துறை தொடங்கி இந்த பிஎப் முறை பின்பற்றப்படுவதில்லை என்பதே உண்மை. அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு கிடைத்தாலும், மாத சம்பளத்தை நம்பி தான் நமது ஊர்களில் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்களுக்குக் கிடைத்து வரும் சம்பளமே தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொல்லாமல் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

அடுத்த செய்தி