ஆப்நகரம்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதா?... துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி!!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதையடுத்து, அந்நாட்டுக்கு தாம் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 20 Oct 2019, 11:42 pm
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் திங்கள்கிழமை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக இவ்விரு மாநிலங்களில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
Samayam Tamil tnm


சனிக்கிழமை மாலையுடன் (அக்டோபர் 19) அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, டெல்லியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற "காந்தி 150" நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான், அமீர கான் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி துருக்கி நாட்டுக்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அதாவது, அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் அவர் அங்கு அங்கரா நகரில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிரதமரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஞாயிறுக்கிழமை (இன்று) தகவல் வெளியாகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய துருக்கி அதிபக் தாயீப் எண்ட்ரோகன், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் 370 -ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டுள்ளதை விமர்சித்தும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், பிரதமரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி