ஆப்நகரம்

ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்; வெளியேறிய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்!

விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் எடுத்துள்ள ராஜினாமா முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

Samayam Tamil 18 Sep 2020, 9:47 am
ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் ஹர்சிம்ரத் கவுர். இவர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று விவசாய மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள ஷிரோமணி அகாலி தளம் கட்சி கையில் எடுத்தது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டியது.
Samayam Tamil Harsimrat Kaur Badal


ஆனால் அவையில் தனிப்பெரும்பான்மை உடன் விளங்கும் பாஜக அரசு மசோதாக்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த சூழலில் விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஷிரோமணி அகாலி தளக் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்தார். இதுதொடர்பான கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்சிம்ரத் கவுர், விவசாயிகளின் மகளாக, சகோதரியாக அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஏற்றுக் கொண்டார்.

விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

இதற்கிடையில் அரசியல் நெருக்கடி காரணமாகவே ஹர்சிம்ரத் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், மக்களவையில் நிறைவேறியுள்ள மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியவை.

ஆனால் பஞ்சாப் மக்களிடையே காங்கிரஸ் கட்சி பொய் கூறி வருகிறது. விவசாய மசோதாக்களில் இடம்பெற்றுள்ள நன்மைகள் குறித்து ஷிரோமணி அகாலி தளக் கட்சிக்கும் நன்கு தெரியும். ஆனால் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே இப்படியொரு தவறான முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி