ஆப்நகரம்

மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்; எப்படி ஜெயிக்கப் போகிறது மத்திய அரசு?

மழைக்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவசாய மசோதாக்கள் மீது காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 20 Sep 2020, 11:08 am
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று விவசாய மசோதாக்கள் வடமாநில விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு சம்பாதித்துள்ளது. இது விவசாயத்துறையில் கார்ப்பரேட்களை களமிறக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. விவசாயப் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத சூழல் ஏற்படும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிரோமணி அகாலி தளக் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
Samayam Tamil New Farmer Bills


இதேபோல் ஹரியானாவில் இருந்தும் பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாய மசோதாக்களை நிறைவேற்றியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாய மசோதாக்களை மக்களவையில் தனிப்பெரும்பான்மை உடன் விளங்கும் பாஜக எளிதில் நிறைவேற்றியது.

ஆனால் மாநிலங்களவையில் நிலைமை அவ்வாறு இல்லை. 245 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள மாநிலங்களவையில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் தான் பல்வேறு மசோதாக்களை பாஜக நிறைவேற்றி வந்துள்ளது. மாநிலங்களவையில் பாஜகவிற்கு 86 எம்.பிக்கள் இருக்கின்றனர்.

விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

அதேசமயம் அதிமுகவின் 9, தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் 7, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் 6, சிவசேனாவின் 3, பிஜு ஜனதா தளத்தின் 9, தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு எம்.பி ஆகியோரின் ஆதரவு கிடைக்கும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.

வலுவான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் இல்லாத சூழலில் எதையும் சாதிக்க முடியும் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளது. இந்நிலையில் மக்களவையில் மசோதாக்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மீது காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி