ஆப்நகரம்

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரும் பொருட்டு விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டு வந்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 3 Jun 2020, 5:52 pm
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த பணியை ஏர் இந்தியா விமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவுக்கு வரும் பொருட்டு விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டு வந்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

அதன்படி, தொழில் விசா வைத்திருக்கும் (B-3 விசா பொருந்தாது) வெளிநாட்டு தொழிலதிபர்கள் திட்டமிடப்படாக விமானங்கள், தனி விமானங்களில் இந்தியாவுக்கு வரலாம். வெளிநாட்டு சுகாதார வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இந்திய சுகாதாரத் துறை தொழில்நுட்பப் பணிகளுக்காக இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் அமைந்துள்ள வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் சார்பாக இந்தியாவுக்கு பயணம் செய்யும் வெளிநாட்டு பொறியியல், நிர்வாக, வடிவமைப்பு மற்றும் பிற நிபுணர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து உற்பத்தி நிறுவனங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் (வங்கி, வங்கி சாராத நிதித்துறை நிறுவனங்கள்) இதில் அடங்கும்.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி


இந்தியாவில் வெளிநாட்டு மூல இயந்திரங்கள் மற்றும் உபகரண வசதிகளை நிறுவுதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகளுக்காக வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தின் அழைப்பின் பேரில் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேற்கண்ட பிரிவினர் இந்தியாவுக்கு வரும் பொருட்டு தொழில், வேலைவாய்ப்பு விசாக்களை இந்திய தூதரகங்களிடம் இருந்து புதிதாக பெற வேண்டும். வெளிநாட்டவர்கள் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் நீண்டகால விசாக்களை இந்திய தூதரகங்களில் மறு சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும். முந்தைய பழைய விசாக்கள் வைத்திருந்தால் இந்தியாவினுள் பயணிக்க வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அடுத்த செய்தி