ஆப்நகரம்

ரிசர்வ் வங்கியிடம் இருந்து உத்தரவு வரவில்லை: ஏப்ரல் மாதத்துக்கு ஈ.எம்.ஐ. பிடிக்கப்படுமா?

ரிசர்வ் வங்கியிடம் இருந்து அறிவுறுத்தல் வராததால், ஏப்ரல் மாதத்திற்கான ஈ.எம்.ஐ.தொகை பிடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளது

Samayam Tamil 31 Mar 2020, 2:37 pm
சென்னை: ஈ.எம்.ஐ.தொகை பிடிப்பது ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது தொடர்பாக எந்த அறிவுறுத்தலும் அதிகாரப்பூர்வமாக வங்கிகளுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

இதனால், மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமாகியுள்ளது. இந்த விஷயத்தில் வங்கிகள் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.

முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ரசகுல்லா; ஊரடங்கில் நிகழ்ந்த சுவாரஸியம்!

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது. ரெப்போ விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளி வைக்கப்படுகிறது. கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட கூடாது. மூன்று மாதம் கழித்து தொடர்சியாக தவணையை கட்டவேண்டும். இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

வங்கிகளில் மூன்று மாதங்களுக்கு ஈ.எம்.ஐ. பிடிக்கப்படாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, ஊரடங்கு சமயத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிம்மதியை அளிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில், ஈ.எம்.ஐ.தொகை பிடிப்பது ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது தொடர்பாக எந்த அறிவுறுத்தலும் அதிகாரப்பூர்வமாக வங்கிகளுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு- ஊரடங்கில் இப்படியொரு ஹேப்பி நியூஸ்!

அத்துடன், ஈ.எம்.ஐ. பிடிப்பதற்கான நினைவூட்டல் குறுஞ்செய்திகளும் சிலரது செல்போன்களுக்கு சென்றுள்ளது. எனவே, ஏப்ரல் மாதத்திற்கான ஈ.எம்.ஐ.தொகை பிடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி