ஆப்நகரம்

சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!!

உடல்நலம் பாதிக்கப்பட்டு மங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

Samayam Tamil 11 Oct 2019, 8:57 am
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கத்ரி கோபால்நாத் இன்று காலமானார். துபாயில் பணியாற்றி வரும் இவரது மகன் குரு இன்று மங்களூருவை வந்தடைந்த பின்னர் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்பது தெரிய வரும்.
Samayam Tamil kadri


இவருக்கு மனைவி இருக்கிறார். இவரது மற்றொரு மகன் மணிகாந்த் கத்ரி இசையமைப்பாளராக இருக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தில் மங்களூருவில் இருக்கும் மித்தகரே என்ற இடத்தில் டிசம்பர் 11, 1949ல் பிறந்தார். இவரது பெற்றோர் தனியப்பா, கங்கம்மா ஆவார். கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞராவார்.

மைசூர் அரண்மனையில் ஒருமுறை இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தது. அப்போது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டு, சாக்சபோனை கற்று சிறந்த கலைஞரானார். மங்களூரின் கலாநிகேதன் அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பை கோபால்நாத் கற்றார். பின்னர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞராக விளங்கிய டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

இவருக்கு 2018ல் கம்பன் புகழ் விருதை அகில இலங்கை கம்பன் கழகம் வழங்கியது. 2018ல் கர்நாடக கலாஸ்ரீ விருதும், 1998ல் கர்நாடக ராஜ்யோட்சவா விருதும், 2004ல் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கோபால்நாத்தை கவுரவித்தது. மேலும் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் மறைந்த கே. பாலச்சந்தரின் முயற்சியால் ‘டூயட்’ எனும் தமிழ் திரைப்படத்தில் கோபால்நாத், ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து இசை வாசித்தார். அனைத்துப் பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து கோபால்நாத் அளித்திருந்த பேட்டியில், "ரகுமானுக்கு சுமார் 30 ராகங்களை வாசித்துக் காட்டினேன். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது'' என்று தெரிவித்து இருந்தார்.

அடுத்த செய்தி