ஆப்நகரம்

பதற்றம் தணியாத பெங்களூரு; 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு!

பெங்களூருவில் கடந்த வாரம் வன்முறை வெடித்ததை அடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2020, 11:38 am
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த செவ்வாய் அன்று இரவு டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தது. புலிகேசி நகர் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் போட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் போஸ்ட் காரணமாக இஸ்லாமியர்கள் கொந்தளித்தனர். இந்தப் பதிவு உடனடியாக பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
Samayam Tamil Bangalore Riots


ஏராளமானோர் காவல்நிலையம் முன்பு திரண்டு நவீனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் எம்.எல்.ஏவின் வீடு, உறவினர் நவீன் வீடு, காவல்நிலையங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஏராளமான பொருட்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பலர் படுகாயமடைந்தனர். போலீசாரும் தாக்குதலில் காயமடைந்தனர். இதையடுத்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரக்காரர்கள் 340 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சோஷியல் டெமாகிராடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகரின் உறவினர்களும் அடங்குவர். இந்த விவகாரம் தொடர்பாக நவீன் கைது செய்யப்பட்டு காவல்துறையின் கஸ்டடியில் இருக்கிறார்.

பெங்களூரு கலவரத்தை பற்றவைத்த தீப்பொறி இதுதான்; அதுவும் அரசியல் ட்விஸ்ட்!

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான கேஜி ஹள்ளியைச் சேர்ந்த சையத் நதீன் என்ற 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள பவ்ரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதன் தொடர்ச்சியாக வரும் 18ஆம் தேதி காலை 6 மணி வரை கலவரம் வெடித்த டிஜே ஹள்ளி, கேஜி ஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் கமால் பந்த் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி