ஆப்நகரம்

72 வயதிலும் மின்னல் வேக டைப்பிங்; தலைவணங்கி, மூதாட்டியை பெருமைப்படுத்திய சேவாக்!

வயது முதிர்விலும் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை சேவாக் கௌரவப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 13 Jun 2018, 4:29 pm
போபால்: வயது முதிர்விலும் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை சேவாக் கௌரவப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil Laxmi Verma
லட்சுமி வெர்மா


மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரு டைப்-ரைட்டிங் மிஷனுடன் லட்சுமி வெர்மா(72) அமர்ந்து, வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல பணி மேற்கொண்டிருந்த அவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. சமூக வலைதளங்களிலும், உள்ளூர் மீடியாவிலும் லட்சுமி வெர்மாவின் புகழ் பரவி வைரலானது.

இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டியதால், நேற்றைய பொழுது இன்ப அதிர்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதற்கு காரணம், யாரோ ஒருவர் லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது டுவிட்டரிலும் வைரலானது. இந்நிலையில் கிரிக்கெட் முன்னாள் வீரர் சேவாக்கும், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமி குறித்து தகவலை பதிவிட்டார்.

அதில், ”என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஆச்சரியப் பெண்மணி. மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை ஆகியவற்றைத் தான். இவருக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் 1,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து, வெர்மா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியாற்றி வருகிறார். தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பிரிந்து சென்று இந்தூரில் உள்ள அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு டைப்பிங் செய்ய கற்றுக் கொண்டார். பின்னர் செஹோருக்கு திரும்பியுள்ளார்.

இந்த சூழலில் அப்போதைய ஆட்சியர் ராகவேந்திரா சிங், துணை மண்டல நீதிபதி பவ்னா வலிம்பே ஆகியோர் லட்சுமி வெர்மாவின் டைப்பிங் வேகத்தைப் பார்த்து வியந்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இடம் அளித்து, பணியாற்ற அனுமதி வழங்கினர். அன்றிலிருந்து தனது பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த லட்சுமி வெர்மா, கடந்த 12 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன்.

இந்தூர் அச்சகத்தில் பணியாற்றிய போது, டைப்பிங் செய்ய கற்றுக் கொண்டேன். ஆட்சியர் ராகவேந்திரா சிங், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியாற்றி எனக்கு உதவினார் என்று கூறினார். இதுதொடர்பாக ராகவேந்திரா சிங்கை தொடர்பு கொண்ட போது, நம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராடி சுயமாக வாழ நினைப்பவர்களுக்கு உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

லட்சுமி வெர்மாவை இன்னும் நினைவு வைத்திருக்கிறேன். அவர் என்னை பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலில் சந்தித்தார். எல்லோருக்கும் ஊக்கமளிப்பவராக, பின்பற்றக்கூடியவராக அவர் திகழ்கிறார் என்று கூறினார். ராகவேந்திரா சிங் தற்போது இந்தூர் மண்டல ஆணையராக பணியாற்றி வருகிறார்.

Sehwag's awed 'pranam' to 72-year-old typist of Sehore.

அடுத்த செய்தி