ஆப்நகரம்

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த சிக்கலில் சோனியா? நெருக்கடி கொடுக்க பாஜக ஆயத்தம்

இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் ஏ.டபிள்யூ-101 ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள பக்க பலமாக இருந்து செயல்பட்டவர் சோனியா காந்தி என்று இத்தாலி நீதிமன்றம் கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதை தற்போது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பாஜக தயாராகி வருகிறது.

TOI Contributor 26 Apr 2016, 10:35 pm
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் ஏ.டபிள்யூ-101 ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள பக்க பலமாக இருந்து செயல்பட்டவர் சோனியா காந்தி என்று இத்தாலி நீதிமன்றம் கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதை தற்போது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பாஜக தயாராகி வருகிறது.
Samayam Tamil sonia gandhi was driving force behind vvip chopper deal italy court
விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த சிக்கலில் சோனியா? நெருக்கடி கொடுக்க பாஜக ஆயத்தம்


2010-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு ஏ.டபிள்யூ-101 ரகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் இந்தியா கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் 3 ஹெலிகாப்டர்களை அந்நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.3,600 கோடியில் முதல் தவணையாக 30 சதவீதத் தொகையை இந்தியா வழங்கிவிட்டது.

இதையடுத்து இந்த பேரத்தில் ரூ. 360 கோடி அளவிற்கு லஞ்சம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த பேரம் ரத்து செய்யப்பட்டதுடன் முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி. தியாகி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியது. அந்நிறுவனம் அளித்த பதிலை இந்தியா நிராகரித்து, முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதியது. இந்த பேரத்தில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் தலைவர் கியூசெப்பி ஓர்சி குற்றவாளி என்று இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்தவிடாமல் இடையூறு செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் இந்த வழக்கு உள்பட ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, இஷாரத் வழக்கை கிளப்ப பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட் லேண்ட் பேரத்திற்கு எவ்வாறு பின்பலமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்தார், காங்கிரஸ் ஆட்சியின்போது ஆட்சிக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலை இத்தாலி நீதிமன்றம் வெளியிட்டு இருந்ததின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் தோண்டி, காங்கிரஸ் வாயை அடைக்க பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுத்தவர்கள் தண்டிக்கப்படும்போது, கொடுத்தவர்கள் ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்றும், இதற்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி