ஆப்நகரம்

ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் போட்டோ - நாடாளுமன்றத்தை மங்களகரமாக்கிய தமிழக பெண் எம்.பிக்கள்!

தமிழகத்தில் இருந்து சென்றுள்ள பெண் எம்.பிக்கள், முதல் நாள் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 18 Jun 2019, 2:01 pm
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil TN Women MPs


மூன்று பேருமே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சிறந்த பேச்சாளர்கள் ஆவர். அவர்கள் கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆவர். இவர்களில் தமிழச்சி மட்டும் இலக்கியம் சார்ந்து இயங்கி வந்தவர். இவர்களின் குடும்பமே திமுகவில் இருந்து வந்துள்ளது.

மற்ற இருவரும் தீவிர அரசியல்வாதிகள். திமுகவிற்காக கனிமொழியும், காங்கிரஸ் கட்சிக்காக ஜோதிமணியும் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றனர். தெறிக்க விடும் மேடைப் பேச்சுகள், சமூக அவலங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தல், தங்கள் கட்சி சார்ந்த விஷயங்களை முன்வைத்தல் என இயங்கி வருகின்றனர்.

இவர்கள் மூவரும் நாடாளுமன்றத்தில் தங்களின் முதல் நாளிற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கனிமொழி வெள்ளைப் புடவையிலும், தமிழச்சி தங்கபாண்டியன் மஞ்சள் நிற புடவையிலும், ஜோதிமணி சிவப்பு நிற புடவையிலும் காணப்படுகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சூலேவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் மேலும் சில பெண் எம்.பிக்களும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவற்றை ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாடாளுமன்றத்தில் பெண்களின் சக்தி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் தமிழகப் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, உரிய தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று நாமும் நம்புவோம்.

இந்நிலையில் போட்டோ ஷூட்டிற்கு பின், மக்களவைக்கு சென்ற தமிழக எம்.பிக்கள் அனைவரும், தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அத்துடன் தமிழ் மொழியின் பெருமை பேசும், தமிழின தலைவர்களின் புகழ்பாடும், சிறுபான்மையின தலைவர்களின் போராட்ட முழக்கங்களை எழுப்பினர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, “பாரத் மாதா கி ஜே” என்று குரல் எழுப்பியுள்ளனர்.

அவர்களுக்கு மத்தியில் தயக்கமின்றி, உற்சாகமாக தமிழில் பேசி கெத்தாக தமிழக எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களின் நம்பிக்கையும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்போம்.

அடுத்த செய்தி