ஆப்நகரம்

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு ஆதரவு தெரிவித்த எழுத்தாளர்கள்!

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேச விரோதவழக்கு போடப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2019, 8:30 am
அடூர் கோபால கிருஷ்ணன், மணிரத்னம், ரேவதி, அனுராக் காஷ்யப், அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
Samayam Tamil mani


இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமரின் மரியாதையை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா அளித்த புகாரின் பேரில், 49 பேர் மீதும் பீகார் மாநிலம் சகர் காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த சம்வத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

சமூகத்தில் உருவாகிவரும் அசாதாரணச்சூழல் மீது இவ்வாறு பிரதமரின் கவனத்தைக் கோருவது எப்பொழுதும் வழக்கத்தில் உள்ளது தான் என்பதுடன் அது குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்று தமுஎகச அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

“பொறுப்பார்ந்த குடிமக்களின் ஜனநாயகச் செயல்பாடுகளை, அவர்களது விமர்சனங்களை பொருட்படுத்தும் மக்களாட்சி மாண்பு மங்கிவருவதன் மற்றோர் வெளிப்பாடே இவ்வழக்குகள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக்கருத்தாளர்களை மவுனமாக்கவும் சிறுமைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரலெழுப்புமாறு மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி