ஆப்நகரம்

அடேங்கப்பா, வெறும் 10 நாளில் இப்படியா? முரட்டுத்தனமா போட்டுத் தாக்கிய மழை!

தென்மேற்குப் பருவமழை நினைத்துப் பார்க்காத அளவு மிகப்பெரிய அளவில் பெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Aug 2020, 1:00 pm
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெறும் 10 நாட்களில் 300 சதவீத மழை பெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 270.4 மில்லிமீட்டர் அளவிற்கு பருவமழை பெய்திருக்கிறது. வழக்கமாக 77.2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்யும். இந்த சூழலில் அபரிமிதமான மழை பெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Rains in Telangana


ஐதராபாத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது 20 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை மற்றும் அதீத கனமழை வரை பெய்யக்கூடும். வங்கக்கடலின் வடமேற்கே புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது. இதன்மூலம் வரும் 23ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு - கொரோனாவால் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

அனைத்து மாவட்டங்களிலும் மழையின் தீவிரத்தைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மைய மண்டலத் தலைவர் நாக ரத்னா தெரிவித்துள்ளார். கோதாவரி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பத்ராத்ரி கோதகுடம் மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் கோதாவரி ஆற்றில் 52.80 அடி அளவிற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

இதனால் பத்ராத்ரி கோதகுடம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. முலுகு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 163ல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முலுகு மாவட்டத்தின் எஸ்.பி சங்ரம் சிங் ஜி பட்டில் கூறுகையில், தேசியப் பேரிடர் மீட்பு படை -யின் உதவியுடன் ரப்பர் படகுகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள ஜுரலா நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். ஜுரலாவில் பெண் ஒருவரின் சடலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நான்வெஜ் சாப்பிட முடியாது - எல்லா கறிக் கடைகளையும் மூட உத்தரவு!

அதீத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் நாசமடைந்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி