ஆப்நகரம்

பாகிஸ்தானின் வர்த்தக அந்தஸ்தை பறித்த இந்தியா

பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா பறித்துள்ளது.

Samayam Tamil 15 Feb 2019, 11:56 am
பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா பறித்துள்ளது.
Samayam Tamil arun-jaitley

தலைநகர் தில்லியில், லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு படை வீரர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து அருண் ஜேட்லி செய்தியாளர்களை சந்தித்தார். தீவிரவாதத் தாக்குதலுக்கு துணைபோனவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்த அருண்ஜேட்லி, மறுக்க இயலாத வகையில் இந்த செயலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பறித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல, சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அருண்ஜேட்லி கூறினார்.

அடுத்த செய்தி