ஆப்நகரம்

சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என் கையெழுத்தல்ல - மணிரத்னம் திடீர் பல்டி?

அமர் உஜாலா என்கிற ஹிந்தி இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்து இல்லை என இயக்குநர் மணிரத்னம் திடீர் பல்டியடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 1:15 pm
ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு முன்னதாக கடிதம் எழுதினர்.
Samayam Tamil mani rathnam 2234


பாஜக தலைமையின்கீழ் நடந்து வரும் ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து, நாகரிக சமூக அமைப்புகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன.

சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. மேலும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது என்றும், தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், ஆளுங்கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என எந்த பொருளும் இல்லை என்றும், ஆளுங்கட்சிக்கு விரோதமாக விமர்சனங்களை வழங்குவது தேசத்துக்கு விரோதமாக கருதப்பட முடியாது என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரபலங்கள் சுட்டிக்காட்டினர்.

எதிர்ப்பை நசுக்காத தேசமே பலமான தேசம் எனக் கூறியுள்ள அந்தக் கடிதத்தில் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் தற்போது அமர் உஜாலா என்கிற ஹிந்தி இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’பசுவதைத் தடுப்பு என்னும் பேரில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மணி ரத்னம் மறுத்துள்ளார்.

’பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன் , பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்தில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற எந்த கடிதமும் தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்’. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி