ஆப்நகரம்

Quota Bill: 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்; வரலாற்று சிறப்புமிக்க தருணம் - பிரதமர் மோடி!

புதுடெல்லி: 10% இட ஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

Samayam Tamil 9 Jan 2019, 8:28 am
பொருளாதார ரீதியில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
Samayam Tamil Modi


மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

தற்போது பொருளாதார ரீதியில் பின் தங்கிய பொதுப்பிரிவினர் அரசு வேலைவாய்ப்புகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை போன்றவற்றில் பின் தங்கியிருக்கின்றனர். ஆகையால், இவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக சட்டப்பிரிவு 15ல் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் சட்டத்தில் அனுமதி தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய இடஒதுக்கீடு வரம்பில் இருந்து கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மொத்த இடங்களில் அதிகபட்சம் 10%க்குள் வரும் வகையில் ஒதுக்கீடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், அனைத்து எம்.பிக்களுக்கும் நன்றி.

எந்த சாதி, மதமாக இருந்தாலும் சரி. அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு ஏழையும் கௌரவமாக வாழ்க்கை நடத்த வேண்டும். அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த மசோதா நிறைவேறியது நமது நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணம் என்று பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த செய்தி