ஆப்நகரம்

குடையில்லை, கவசமில்லை; மும்பை கனமழையில் கடமை தவறாத போக்குவரத்து காவலர்!

கனமழையில் விடாமல் வேலை பார்த்த போக்குவரத்து காவலர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Samayam Tamil 8 Jun 2018, 5:09 pm
மும்பை: கனமழையில் விடாமல் வேலை பார்த்த போக்குவரத்து காவலர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
Samayam Tamil Mumbai Police


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், கடந்த 4ஆம் தேதி பருவமழைக்கு முன்பான கனமழை பெய்தது. இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலையெங்கும் வெள்ளக் காடானது.

வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக நகரத் தொடங்கின. இந்நிலையில் கண்டிவ்லி அகுர்லி சாலையில் போக்குவரத்து காவலர் நந்த்குமார் இங்லே(47), கொட்டும் மழையிலும் விடாமல் வேலை பார்த்தார்.

அவரிடம் குடையில்லை, கவசமில்லை. அதேசமயம் தனது கடமையில் இருந்தும் தவறவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 4ஆம் தேதி இரவு 8 மணியளவில் மும்பையில் மழை தொடங்கியது.

அப்போது அகுர்லி சாலையில் நந்த்குமார் இங்லே பணியில் இருந்தார். அப்போது வீசிய பலத்த காற்று, அங்கிருந்த சாலைத் தடுப்புகளை 150 மீட்டர் தூரம் நகர்த்திச் சென்றது. உடனே அவற்றை சரிசெய்து, இங்லே போக்குவரத்தை சரிசெய்யத் தொடங்கினார்.

தனது போன், பர்ஸ் ஆகியவற்றை மற்றொரு அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அகுர்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால், தனது இடத்தை விட்டு நகராமல் வேலை பார்த்துள்ளார்.

இதற்கிடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது தஹிசார் போக்குவரத்து சோதனைச் சாவடியில் இருந்து பிரதீப் பிலாயே உதவிக்கு வந்துள்ளார். இருவரும் இரவு 11.30 மணி வரை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இங்லேவிற்கு சமூக வலைதளங்களில் கணக்கு ஏதும் இல்லாததால், அவரது வீடியோ வைரலானது குறித்து தெரியவில்லை. இந்த சூழலில் பல்வேறு தரப்பினரும் இங்லேவை நேரில் பாராட்டியதன் மூலம், உண்மை நிலவரத்தை அறிந்துள்ளார்.

மும்பை காவல்துறையில் கடந்த 23 ஆண்டுகளாக, நந்த்குமார் இங்லே பணியாற்றி வருகிறார்.

This Mumbai traffic cop stood in rain for two hours, ensured no snarls.

அடுத்த செய்தி