ஆப்நகரம்

இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களுக்கு அடிச்சுது அதிர்ஷ்டம்; அமைச்சர் பதவியை வாரி வழங்கிய முதலமைச்சர்!

சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jun 2019, 8:45 pm
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து காங்கிரஸ் - மஜத இணைந்து ஆட்சி அமைத்தனர்.
Samayam Tamil Karnataka Cabinet


ஆனால் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வண்ணம் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டது. மறுபுறம் காங்கிரஸ் - மஜத கட்சிக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு போன்றவற்றில் இரு கட்சிகளும் மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அவர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டவர்கள் ஆவர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜக களத்தில் இறங்கியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் - மஜத அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள என்னென்ன வேலைகள் செய்ய முடியும் என்று செயல்படத் தொடங்கியது.

இதற்கிடையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதலமைச்சர் குமாரசாமி ஈடுப்பட்டுள்ளார். இந்த சூழலில் கர்நாடகாவை ஆளும் இரு கட்சிகளுக்கு உரித்தான அமைச்சர் பதவிகள், இரு சுயேட்சைகளுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, ராணிபென்னூர் ஆர்.சங்கர், முல்பாகல் நாகேஷ் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதற்காக பெங்களூரு ராஜ்பவனில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், இரு எம்.எல்.ஏக்களுக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அடுத்த செய்தி