ஆப்நகரம்

இந்தியாவில் எந்தெந்த பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் - முழு பட்டியல் இதோ!

கொரோனா வைரஸ் பாதிப்பை குறிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மூன்று விதமான மண்டலங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 May 2020, 11:35 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்து ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா நோயாளிகள், பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் ஆகியவற்றைக் கொண்டு முன்னதாக ஹாட்ஸ்பாட்கள் பிரிக்கப்பட்டன. இதற்கிடையில் கொரோனா வைரஸில் இருந்து குணமாகி வீடு திரும்புபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
Samayam Tamil சிவப்பு மண்டலங்கள்


எனவே கொரோனா நோயாளிகள், பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம், பரிசோதனை விவரம், மேற்பார்வை செய்ததன் முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக தற்போது பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த 21 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனில் அந்தப் பகுதிகள் பச்சை நிற மண்டலம் என்று கருதப்படும்.

மே 4 முதல் மால்கள், மதுக்கடைகள் திறக்கப்படுகிறதா - கர்நாடக அரசின் முடிவு என்ன?

குறிப்பிட்ட மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் அடிப்படையில் வாரந்தோறும் திருத்தம் செய்யும் வகையிலான பட்டியலை வெளியிட்டுள்ளோம். எனவே கள ஆய்வு, மாநில அளவிலான பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூடுதலாக சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களை மாநிலங்களே அறிவித்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற மண்டலங்களில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது. ஒரு மாவட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகள் இருக்கக்கூடும். அவற்றை தேவைக்கேற்ப தனித்தனி மண்டலங்களாக பிரித்துக் கொள்ளலாம். சிவப்பு நிற மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும். எந்தவித செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இதன்மூலம் வைரஸ் பரவும் சங்கிலித் தொடரை துண்டிக்க முடியும். நாடு முழுவதும் மொத்தம் 130 சிவப்பு மண்டலங்கள், 284 ஆரஞ்சு மண்டலங்கள், 319 பச்சை மண்டலங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம்(19) மற்றும் மகாராஷ்டிராவில்(14) அதிகப்படியான சிவப்பு மண்டலங்கள் இருக்கின்றன. டெல்லியில் மொத்தமுள்ள 11 மாவட்டங்களும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19: 11 நாட்களாக குறைந்த கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை 12 சிவப்பு, 24 ஆரஞ்சு, 1 பச்சை மண்டலங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாததால் அந்த மாவட்டம் மட்டும் பச்சை நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சிவப்பு மண்டலங்கள் 30 மாவட்டங்களாக இருந்த நிலையில் தற்போது 12ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த 28 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி