ஆப்நகரம்

மாவோயிஸ்ட்களை விரட்டிச் சென்று மீட்பு; போலீசார் குடும்பத்திற்காக ஒன்றுதிரண்ட மக்கள்!

போலீசாரின் பெற்றோரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்ட்களை கிராம மக்கள் விரட்டிச் சென்ற சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2020, 3:36 pm
சட்டீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு கிராமங்களை பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். ஆனால் சமீப காலமாக உள்ளூர் இளைஞர்கள் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையில் சேர்ந்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்ட்களால் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கிராம மக்களுக்கு உறுதுணையாக அவர்களை காக்கும் வகையில் ரிசர்வ் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பலமுறை மாவோயிஸ்ட்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை குறிவைக்காமல் அவர்களது குடும்பத்தாரை குறிவைக்கும் செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil Chhattisgarh Maoists


கடந்த ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவ விடுப்பில் சென்ற போலீசாரை அம்பு எய்து கொலை செய்துள்ளனர். அவரது பெற்றோரை கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். மேலும் என்.எம்.டி.சியில் பணியாற்றும் ஊழியரின் சகோதரர் கோடாரியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். இனி தற்போதைய சம்பவத்திற்கு வருவோம். சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குமியாபால் கிராமம்.

யார் இந்த ஸ்வப்னா? கேரளாவை அதிரவைத்த தங்கக் கடத்தல் சம்பவத்தின் பின்னணி!

இங்கு வசித்து வரும் தம்பதி லச்சு தேலம்(64), விஜ்ஜோ(62). இவர்களது மகன் அஜய் தேலம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வரும் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையில் சமீபத்தில் சேர்ந்துள்ளார். இவரை வேலையில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக அவரது பெற்றோரை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

அதனைத் தடுக்கும் முயற்சியில் அவர்களது மகளும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் மாவோயிஸ்ட்கள் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவலறிந்த கிராம மக்கள் 150 பேர் கடந்த செவ்வாய் அன்று தைரியமாக வனப்பகுதிக்குள் நுழைந்தனர். எப்படியாவது இருவரையும் மீட்டு வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் நடந்து சென்றுள்ளனர். அங்கு கான்ஸ்டபிளின் தாயை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ளனர். வயது முதிர்ச்சியின் காரணமாக மாவோயிஸ்ட்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியாத சூழலால் அவரை நடுக்காட்டில் விட்டு விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அவரை மீட்ட கிராம மக்கள் மற்றொரு நபரையும் மீட்டுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர்.

ஆனால் பிஜபூர் மாவட்டம் பதேபல்லிக்கு அந்த நபர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் கிராம மக்கள் வனப்பகுதிக்குள் விடாமல் தேடியுள்ளனர். இந்த தம்பதியை கடத்திச் சென்றது மாவோயிஸ்ட் கமலேஷ், தேவா, வினோத் ஆகியோர் ஆவர். இவர்களைப் பிடித்து தந்தால் ரூ.23 லட்சம் வழங்கப்படும் என்று போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோயில் அருகே விலங்குகள்... பக்தர்களுக்கு எச்சரிக்கை!

இந்நிலையில் கிராம மக்கள் மாவோயிஸ்ட்கள் இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அவர்களிடம் முதியவரை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் கோரிக்கையை வலுவாக முன்வைத்ததை அடுத்து மனம் மாறிய மாவோயிஸ்ட்கள் மற்றொரு நபரை மாலை 5 மணியளவில் விடுவிடுத்துள்ளனர். பின்னர் அனைவரும் தண்டேவாடாவிற்கு இரவு 8.30 மணியளவில் வந்தடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி