ஆப்நகரம்

நாங்கள்தான் அடித்தோம்... இனிமேலும் அடிப்போம்... யார் இந்த இந்து ரக்‌ஷா தளம் ?

தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக பல்கலைக்கழகம் செயல்பட்டதால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்​ரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Jan 2020, 7:28 pm
டெல்லி ஜே.என்.யூ.வில் மாணவர்கள் மீது நடத்தப்ப்ட்டிருக்கும் கன்மூடித்தனமான வன்முறையும், அதன் தொடர்வினைகளும் தான் கடந்த 3 நாட்களாக தேசிய அளவிலான பேசுபொருளாக இருக்கிறது.
Samayam Tamil pinky-chaudhary


சனிக்கிழமை மாணவிகள் விடுதியிலும், ஞாயிற்றுக்கிழமை ஆசியர்கள் சங்க கூட்டத்தின்போதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய 25 மாணாக்கர்கள் கடுமையான காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்துத்துவ அமைப்ப்பான ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்திருப்பதாக ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏபிவிபி மாணவர்கள் மறுத்தனர். மேலும், ஜே.என்.யூ.வின் இடதுசாரி மாணவர்கள் சங்கம் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இப்படி நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர்.

அதே சமயம், ஜேஎன்யூ விடுதியில் முகமூடி அணிந்து கொண்டு தாக்குதல் நடத்திய மர்மகும்பலில் பெண்களும் இடம் பிடித்திருந்தனர் என்பதும், இந்த தாக்குதல்கள் ஏ.பி.வி.பி. அமைப்பில் உறுப்பினராக உள்ள மாணவர்கள் இருந்த அறையில் நடத்தப்படவில்லை என்பதும் மேலும் சந்தேகத்தைக் கிளப்பியது

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்த மாணவர்கள் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் என்ற மாணவி தெரிவித்த செய்திகள் ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தன. அவர் பேசியபோது “அவர்களுக்கு (தாக்குதல் நடத்தியவர்களுக்கு) எங்கள் பெயர் தெரிந்து இருந்தது. பெயரை சொல்லி அடித்தார்கள்” என்று தெரிவித்தார்.

நாங்கள்தான் அடித்தோம்:

இதனைத் தொடர்ந்து பிரச்சினை வலுத்தது. ஏ.பி.வி.பி. தொடர்ந்து மறுப்பு மட்டுமே தெரிவித்து வந்தது. இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக ‘இந்து ரக்‌ஷா தளம்’ என்று அமைப்பு தானே முன்வந்து பொறுப்பேற்றுள்ளது.

தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக செயல்பட்டதால் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

யார் இவர்கள்?
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது இந்த இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு எதிராக பேசியதற்காக ஆம் ஆத்மி அலுவலகத்தின் மீது கடும் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 40 பேரும் இந்து ரக்‌ஷா தளத்தை சேர்ந்தவர்கள்தான். கைது செய்யப்பட்டவர்களில் அந்த அமைப்பின் தற்போதைய தலைவரான பிங்க்கி சௌத்ரியும் அடக்கம்.

இனிமேலும் தாக்குவோம்:
தற்போது நடந்த ஜே.என்.யூ. தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்லும் இந்த அமைப்பு, இதுபோன்ற தேச விரோத நடவடிக்கைகள் எந்த பல்கலைக் கழகத்தில் நடந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

சங்பரிவார் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பு, தாக்குதலுக்கு பின்னால் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த அமைப்பு இதற்கு பொறுப்பேற்றிருப்பது, இந்த விவகாரத்தைத் திசை திருப்பவே என்றும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த வாக்குமூலம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி