ஆப்நகரம்

அதுவும் இவ்வளவு கம்மியா? தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆச்சரியம்!

கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 6:39 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பரிசோதனை செய்வது அவசியமாகிறது. இதன்மூலம் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து விரைவாக தனிமைப்படுத்த முடியும். பிறருக்கு வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும். கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால் அதற்கேற்ப சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்தலாம். இத்தனை படிநிலைகளுக்கும் அடித்தளமாக இருப்பது கொரோனா பரிசோதனை. இதில் பல்வேறு விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் RT-PCR பரிசோதனைகளைத் தான் இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்கிறது.
Samayam Tamil Corona Test in Odisha


இதனை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த சேவையை அரசு ஆய்வகங்கள் இலவசமாக வழங்கினாலும், தனியார் ஆய்வகங்கள் அதிக விலையை நிர்ணயித்து பொதுமக்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகின்றன. குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் RT-PCR பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் ரூ.1,200 கட்டணம் வசூலித்து வருகின்றன.

இம்மாநிலத்தில் ICMR அனுமதியின் பேரில் நான்கு ஆய்வகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மாநில அரசு முக்கிய ஆலோசனை நடத்தி இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இனிமேல் இரவு ஊரடங்கு; இரண்டாவது அலைக்கு ஸ்கெட்ச் போடும் கர்நாடகா!

அதில், கடந்த ஜூலை மாதம் தனியார் ஆய்வகங்களில் RT-PCR கொரோனா பரிசோதனைக்கு ரூ.2,200ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் ரூ.1,200ஆக மாநில அரசு குறைத்தது. தற்போது இந்த கட்டணம் மேலும் குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி உட்பட ரூ.400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புவனேஸ்வரில் உள்ள RMRC மேற்பார்வையின் கீழ் ICMR வழிகாட்டுதல்களின் படி தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு ஆய்வகங்களில் எந்தவித கட்டணமின்றி இலவசமாக வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி