ஆப்நகரம்

நீதிமன்றத்தில் புகுந்த சிறுத்தைப் புலி; எகிறி குதித்து ஓட்டம் பிடித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள்!

அகமதாபாத்: சிறுத்தைப் புலி புகுந்ததால், அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Samayam Tamil 14 Dec 2018, 11:40 pm
குஜராத் மாநிலம் சுரேந்தரா நகர் மாவட்டத்தில் சோட்டிலா நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று மதியம் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விருந்தாளி ஒருவர் வருகை புரிந்தார். அவர் வேறுயாருமில்லை, சிறுத்தைப் புலி.
Samayam Tamil Leopard


இதைக் கண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியே ஓட்டம் பிடித்தனர். உடனே நீதிமன்ற அறையின் அனைத்து கதவுகளையும் வெளிப்புறமாக பூட்டினர். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து சுரேந்தர் நகர் போலீசார் கூறுகையில், அனைத்து ஊழியர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பாக உள்ளனர். வனத்துறை ஊழியர்கள் நீதிமன்றத்திற்கு விரைந்து கொண்டிருக்கின்றனர் என்றனர். அந்நகரில் சோட்டில்லா என்ற சிறிய மலைப்பகுதிக்கு அருகே நீதிமன்றம் அமைந்துள்ளது.

அங்கு புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம் இருக்கிறது. மலைப் பகுதியைச் சுற்றிலும் பரந்து, விரிந்த வனப்பகுதி உள்ளது. அங்கு சில வன விலங்குகளும் வசித்து வருகின்றன. நடப்பு மாதத்தின் தொடக்கத்தில், அதாவது நவம்பர் 5ஆம் தேதி அரை நாள் வரை குஜராத் சட்டமன்றம் செயல்படவில்லை.

அப்போது சிறுத்தைப் புலி ஒன்று வந்து சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. சமீப மாதங்களாகவே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 21 - 26 காலக்கட்டத்தில் தெற்கு குஜராத்தில் சிறுத்தைப் புலி தாக்கி மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, குஜராத் மாநிலத்தில் 1,395 சிறுத்தைப் புலிகள் இருக்கின்றன.

அடுத்த செய்தி