ஆப்நகரம்

முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துங்க; அப்புறம் நிதி தறோம்- தமிழகத்திடம் மத்திய அரசு தடாலடி!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல், நிதி எப்படி ஒதுக்கீடு செய்வது என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 16 Jul 2019, 9:32 pm
தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவிருந்தது. ஆனால் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கவில்லை என்றும், பழங்குடியினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு சரியில்லை என்றும் திமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
Samayam Tamil Parliament


இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இடஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடித்து 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர்.

ஆனால் பல்வேறு காரணங்களைச் சுட்டிகாட்டி, தேர்தல் தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிர்வகித்து வருகின்றனர்.

இதன் காரணமாக உள்ளாட்சியில் ஏராளமான பணிகள் முடங்கி கிடக்கின்றன. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை தமிழக மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பினார். அதாவது, தமிழகத்தில் நீண்ட நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் ஏராளமான பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு காரணத்தை முன்வைக்கிறது.

முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள். அதன்பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கறாராக கூறிவிட்டார்.

அடுத்த செய்தி