ஆப்நகரம்

டிடிவி கட்சிக்குத் தாவ நினைத்த எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்பட்ட கதி கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்படுமா?

டிடிவி கட்சிக்குத் தாவ நினைத்த எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்பட்ட கதி கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இவர்கள் இனி சட்டமன்றத்துக்கு வருவார்களா அல்லது புறக்கணிப்பார்களா எனத் தெரியாத நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறது, பாஜக இவர்களை இனி காப்பாற்றுமா எனப் பார்ப்போம்.

Samayam Tamil 24 Jul 2019, 1:58 pm
கர்நாடகா மாநிலத்தில் ஆளும் கூட்டணியான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை.
Samayam Tamil dinakaran-759


ராஜினாமாவை ஏற்கக்கோரி அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிருப்தி உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம், அரசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கச் செய்ய சபாநாயகர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மனு ஏற்கப்படாது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதும் கலந்துகொள்ளாததும் அவர்களது விருப்பம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்காமல் அமளியில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் ஆட்சி மாற்றமா? அதிரடி பிளானில் பாஜக!

இவர்களை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இதேபோல கூட்டாக டிடிவி தினகரன் கட்சிக்குத் தாவினர். கட்சித் தாவல் தடைச் சட்டம் மூலமாக தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்தது. இந்த தொகுதிகளில் மறு தேர்தல் நடைபெற்றது. கட்சித் தாவ நினைத்த 18 எம்.எல்.ஏ-க்கள் பதவியை இழந்து அவர்களது அரசியல் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியது.

அதேபோல கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவினால் இவர்கள்மீது நடவடிக்கை பாயும் என்பதால் பாஜக சாமர்த்தியமாக அவர்களை ராஜினாமா செய்ய வைக்க முயன்று தோற்றது. ஆனால் அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க வைப்பதன் மூலமாக ஆட்சியை பிடித்துள்ளது என கர்நாடகா காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜகவை நம்பிய இவர்களது எதிர்காலம் என்ன என்றால் கேள்வுக்குறிதான். எதிர்காலத்தில் பாஜக இவர்களுக்கு கட்சியில் ஏதாவது பதவி கொடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

கட்சித் தாவல் தடைச்சட்டம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இதுபோன்ற கட்சித் தாவல்களுக்கு என்ன சொல்கிறது எனப் பார்ப்போமா?

கட்சி தாவல் தடை சட்டம், 1985, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், 52-வது திருத்தத்தின் படி, பத்தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1985-ல் 52-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்.

நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார்.

ஒரு உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி அவர் தேர்தலில் நிறுத்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ கட்சிக் கொறடாவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கட்சிக் கொறடா கட்டளையை மீறினால் பதவி பறிபோகும். இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவி பறிபோகும்.

இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்து இந்தியா முழுவதும் பல மாநில மற்றும் தேசிய கட்சிகளில் அவ்வப்போது கட்சித் தாவல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

அடுத்த செய்தி