ஆப்நகரம்

அரசு வளர்ச்சியில் AI.. தற்போது இருக்கும் 80% வேலைகள் எதிர்காலத்தில் இருக்காது.. நிபுணர் எச்சரிக்கை!

AI தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் 80 சதவீத வேலைகள் இருக்காது என நிபுணர் எச்சரித்துள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 10 May 2023, 1:22 pm
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் (Artificial Intelligence) தற்போது மனிதர்கள் பார்க்கும் 80 சதவீதம் பணிகள் எதிர்காலத்தில் இருக்காது என அத்துறையில் கொடிகட்டி பறக்கும் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
Samayam Tamil ai robot image


இன்றைக்கு உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்த பேச்சே காணப்படுகிறது. ஐடி துறை மட்டுமல்லாமல் மருத்துவம், பொறியியல், கல்வி, வங்கி என கிட்டத்தட்ட அனைத்து துறைகளுமே ஏஐ தொழிநுட்பத்தை நாட தொடங்கிவிட்டன. ஏஐ தொழில்நுட்பம் குறித்து புரியாதவர்களுக்கு, அப்படி என்ன அதில் இருந்துவிட போகிறது என கேள்வி எழலாம். அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால், 100 சூப்பர் கம்யூட்டர்கள் மனித உணர்வுகளுடன் இயங்கினால் எப்படி இருக்குமோ, அதுதான் ஏஐ.

அதற்கு சமீபத்திய உதாரணமாக சாட் ஜிடிபியை (Chat GPT) சொல்லலாம். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த சாட் ஜிபிடி உங்களுக்கு உதவும். அவ்வளவு ஏன்.. நீங்கள் எந்த வேலையும் பார்க்காதவர் என்றாலும் கூட உங்களுக்கு சாட் ஜிபிடியால் உதவும்.

அசுர வளர்ச்சியை நோக்கி ஏஐ: இந்த சாட் ஜிபிடியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். நீங்களே அசந்து போற அளவுக்கு அதன் பதில் இருக்கும். நீங்கள் இயற்பியல் விஞ்ஞானியாக இருந்தால், உங்களுக்கு ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை எளிமையாக புரிய வைக்கும். நீங்கள் இயக்குநராக இருந்தால் உங்களுக்கு திரைக்கதை எழுதிக் கொடுக்கும். அந்த அளவுக்கு ஒரு அசுர வளர்ச்சியை பெற்றிருக்கிறது ஏஐ. ஆனால், இது ஏஐ தொழில்நுட்பத்தின் தொடக்கம்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். இன்னும் 10, 20 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.

நிபுணர் விடுக்கும் எச்சரிக்கை: இந்த சூழலில்தான், உலகில் தலைசிறந்த ஏஐ நிபுணர்களில் ஒருவரான பென் கோர்ட்செல் ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஏஐ குறித்து ஆராய்ச்சி செய்வதற்காகவே தொடங்கப்பட்டுள்ள Singularity NET நிறுவனத்தின் நிறுவனர்தான் பென் கோர்ட்செல். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

80 சதவீதம் வேலைகள் காலி: ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்கள் வேலை இழப்பை கட்டாயம் எதிர்கொண்டே ஆக வேண்டும். தற்போது உலகம் எங்கும் இருக்கும் 80 சதவீத வேலைகள் இல்லாமல் போய்விடும். இதை ஒரு ஆபத்தாக நான் பார்க்கவில்லை. இதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். வாழ்வதற்காக உழைப்பதை விட, பல நல்ல விஷயங்களில் மனிதர்கள் ஈடுபடலாம். ஆனால், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு அது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சில வருடங்களில்.. ஒருவர் பின் ஒருவராக அவர்களின் வேலை பறிபோனால் அந்த சமயத்தில் ஏற்படும் சமூக பிரச்சினையை எப்படி சமாளிக்க போகிறோம் எனத் தெரியவில்லை. மனிதர்களின் உணர்வுகள் இருந்தாலும், முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடந்து கொள்ள பயிற்சி மற்றும் ப்ரோகிராமிங்கை (Programming) விட ஒரு பெரிய விஷயம் தேவைப்படுகிறது. இன்றைய சூழலில் அது ஏஐ-இடம் இல்லை. ஆனால், சில வருடங்களில் அந்த திறனையும் ஏஐ பெற்றுவிடும். இவ்வாறு பென் கோர்ட்செல் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி