ஆப்நகரம்

அனிதா ஆனந்த்... கனடா அமைச்சரவையின் முதல் தமிழ்ப்பெண்...

கனடாவின் பொதுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அனிதா நான்கு குழந்தைகளுக்கு தாய். இவர், ஓக்வில் பிராந்தியத்தில் உள்ள இந்தோ-கனடிய சமூக மக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்

Samayam Tamil 21 Nov 2019, 11:46 pm
கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், முதன் முதலாக தமிழ்ப் பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அமைச்சரவையில் தனது பெயரை அவர் பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil anita anand




யார் இந்த பெண்?

இவர் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்தவர். கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் உள்ள வேலூரைத் தனது பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு டாக்டர். இவரது இயற்பெயர் சுந்தரம் விவேகானந்தன். அனிதாவின் தாயார் சரோஜ் ராம், பஞ்சாப் அமிர்தரஸைச் சேர்ந்தவர்.



தற்போது கனடாவின் பொதுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அனிதா நான்கு குழந்தைகளுக்கு தாய். இவர், ஓக்வில் பிராந்தியத்தில் உள்ள இந்தோ-கனடிய சமூக மக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.



மேலும் கனடிய - இந்தோ நாகரிக அருங்காட்சியகத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

பயங்கரவாதிகளால் சில ஆண்டுகளுக்கு முன் தகர்க்கப்பட்ட ஏர் இந்தியா 182 விமானம் தொடர்பான விசாரணையில், ஆணையத்துக்கான மிக முக்கியமான ஆய்வுகளை இவர் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



புதிய ட்ரூடோ அரசாங்கத்திற்கான அமைச்சரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எழுவரில் அனிதா ஆனந்த்தும் ஒருவர். இவர் தவிர மேலும் 3 இந்தியர்கள் கனடிய அமைச்சர்களாவர். இதில் அனிதா மட்டுமே தமிழ் பூர்வீகம் கொண்டவர்.

அடுத்த செய்தி